காமெடி நடிகரான முத்துக்காளை சினிமா துறையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றும் சந்தித்த பிரச்சனைகளை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
கார்பெண்டர்
காமெடி நடிகர் முத்துக்காளை சமீபத்தில் ஒரு தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு சினிமா துறையில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் தடுக்கப்பட்ட வாய்ப்புகள் பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி என்கிற ஊரில் தான் பிறந்தேன். நடிப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சின்ன வயதில் இருந்து எம்.ஜி.ஆர். படங்களை அதிகம் பார்ப்பேன். அதை பார்த்து தான் சிலம்பம் கற்றுக் கொண்டேன். அதன்பின் கராத்தே கற்றுக்கொண்டேன். இலக்கு இல்லாமல் அவற்றை கற்றுக்கொண்டேன். அதன்பின், இதை சண்டை பயிற்சி கலைஞராக பயன்படுத்தலாமே என்று சென்னை வந்தேன். ஆனால், அது அவ்வளவு ஈஸியாக நடக்கவில்லை. ஏவிஎம்-மில் கார்பெண்டர் வேலை பார்த்தேன். அப்படியாவது நடிகர்களை சந்திக்க மாட்டோமா என்று தான். அப்புறம் டெய்லர் வேலை கற்று அதை பார்த்தேன். வாய்ப்பே கிடைக்கவில்லை. விரக்தியாகி இனி சினிமா வேண்டாம், டெய்லர் வேலையே பார்க்கலாம் என முடிவு செய்தேன்.
வடிவேலுவுடன் மனஸ்தாபம்
அப்புறம் திடீர்னு ஒரு நாள், ஸ்டண்ட் அசோஷியேசன் உறுப்பினராகி அட்டை வாங்கிட்டு வெளியே வந்தேன். முதல் படமே காதலுக்கு மரியாதையில் பணியாற்றும் வாய்ப்பு. சண்டைக் கலைஞராக வந்து, அதன்பின் கவுண்டமணி சாருடன் நடிக்கும் போது காமெடிக்கு மாற்றப்பட்டேன். அதன்பின் இரணியன் படத்தில் தான் வடிவேலு உடன் நடித்தேன். எஸ்.பி.ராஜ்குமார் சார் தான் என்னை பரிந்துரை செய்தார் . கவுண்டமணி சாரிடம் நுழைத்ததும் அவர் தான். வடிவேலுவிடம் நுழைத்துவிட்டதும் அவர் தான். வடிவேலு சாருடன் யாராவது சிங் ஆகிவிட்டால், அவரோடு சேர்த்து அழைத்துச் செல்வார். அப்படி தான் நானும் அவருடன் சிங் ஆகிவிட்டேன். நிறைய படங்கள் அவருடன் சேர்ந்து நடித்து, இன்றும் வரவேற்பை பெற்ற காமெடியாக அவை உள்ளன. இடையில் அவருடன் மனஸ்தாபம் ஆனது. அவரோடு இருக்கும் எல்லாருக்கும் இடையில் அவ்வாறு ஆகும். ஒரு படத்தில் காமெடிக்கு என 10 சீன் இருக்கும். வடிவேலு உடன் 20 பேர் இருப்பாங்க. அத்தனை பேருக்கும் அதில் வாய்ப்பு தர முடியாது. அப்போ, யார்கூட இருக்காங்களோ அவங்களுக்கு வாய்ப்பு தருவார். சில நேரங்களில் இதை இவன் பண்ணா நல்லா இருக்கும் என ஆள் பார்த்து கொடுப்பார்.
கை ஏந்தாமல் இருக்கிறேன்
சில நேரங்களில் அவரை விட நன்றாக நடிக்கிறோம் என போட்டு கொடுத்து விடுவார்கள். அவரும் கூப்பிட்டு கேட்பார். அதன் பின் பார்த்தால் 4 படங்களில் வாய்ப்பு தரமாட்டார். சில நேரங்களில் போட்டு கொடுப்பதை கேட்பார். ஆனால் கடைசியில் அவராக சில முடிவு எடுத்துவிடுவார். வடிவேலு அம்மா இறந்த அன்று, நானும், கிங்காங்கும் ஈரோட்டில் இருந்தோம். நிகழ்ச்சியை விட்டு விட்டு போக முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. எலி படத்தில் தான் கடைசியாக அவரை பார்த்தேன். புதுக்கோட்டையில் இருந்த என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு தேவை என்றால் எங்கே இருந்தாலும் அழைப்பார். தேவையில்லையென்றால் அருகில் இருந்தாலும் அழைக்கமாட்டார். அவரோட 10 பேர் கூட இருந்தோம். அந்த 10 பேரும், அவர் நடிக்காமல் இருந்த நேரத்தில் யாரிடத்திலும் கை ஏந்தாமல் சுய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அது வடிவேலுவிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்” என்று முத்துக்காளை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.