தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சகித்துக் கொள்ள முடியாது

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கடந்த 24ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது.

வலியுறுத்தல்

தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது. தமிழ்நாடு மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here