திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 2 பேருக்கு மார்ச் 3-ம் தேதி நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பேரதிர்ச்சி
திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த நான்கு ஏடிஎம் மையங்களில், கடந்த பிப்.,12-ம் தேதி புகுந்த மர்ம கும்பல், இயந்திரத்தை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட 5 எஸ்.பி.க்கள் தலைமையிலான 9 தனிப்படை அதிகாரிகள், ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்ற காவல்
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய 2 பேரை ஹரியானா மாநிலத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். பின்னர் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட அவர்கள், திருவண்ணாமலை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இன்று காலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.