“16 வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்” என கவிஞர் வைரமுத்து எழுதியது போல் பள்ளிப்பருவத்தில் ஏன்? எதற்கு? என்று தெரியாமல் வருகிற காதலும்; வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் அந்த பள்ளிப்பருவ காதல் மறக்காமல் இருப்பதும் ஒரு அதிசயம் தான். காதலர் தினமான இன்று சிறப்புத் தொகுப்பாக நடிகை திரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் 2 படங்களை பார்ப்போம்.
96 காதல்
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தை இயக்கியவர் பிரேம்குமார். ஜானு என்ற பெயரில் திரிஷா நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காத நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது. படத்தின் கிளைமாக்ஸ் அனைத்து காதல்களையும் கண்கலங்க வைத்தது. தங்களது எதார்த்த நடிப்பால் விஜய் சேதுபதியும், திரிஷாவும் ராம் மற்றும் ஜானுவாகவே வாழ்ந்திருந்தார்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைவேறாத காதலை நினைவுபடுத்தும் அளவிற்கு காதல் காவியமாக இப்படம் வெற்றி பெற்றது.
காதல் ஓவியம்
யோசித்து வருவதில்லை காதல், பார்த்த உடனேயே வருவது தான் காதல் என்பதை தெளிவாக கூறிய படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த திரைப்படம் தான் இது. திரிஷாவை பார்த்த அந்த நிமிடத்திலேயே காதலில் விழும் சிம்பு, தனது காதலி எப்படி வெளிப்படுத்தினார்! சிம்புவின் காதலை திரிஷா ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை அழகான காதல் ஓவியமாக கொடுத்திருப்பார் இயக்குநர்.
பல விதம்
பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல், மோதலுக்குப் பின் காதல், காவிய காதல், இளம்பருவ காதல் என பல காதல் கதைகளையும், காதல் பரிமாணங்களையும் திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு படங்கள் ஒவ்வொரு வகையில் ட்விஸ்ட்டுகளை வைத்து ஹிட் கொடுத்து வருகின்றன. என்னதான் திரில்லர், காமெடி, ஆக்சன் என்று பலவிதமான படங்கள் வந்தாலும், காதல் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் போது மறந்து போகும் பல படங்களுக்கு மத்தியில், காதல் வெற்றியோ, தோல்வியோ தங்களது உண்மையான காதலை மனதில் நினைவுபடுத்தும் படம் தான் உண்மையான காதல் படங்கள். அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளது.