வருகிற 27-ம் தேதி படைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதைடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவ பிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விறுவிறு நகர்வு
கடந்த 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் போட்டியிடு கே.எஸ்.தென்னரசு நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி செல்கிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் அணி தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போலீசார், தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 122 புகார்கள் வந்துள்ளதாகவும், இதில் 115 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.