ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்போம் என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கை
இதனையடுத்து சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்; ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.வுக்கு நன்றி தெரிவித்தோம். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். எதிரணியில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்.