ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் மும்முரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.
திடீர் அறிவிப்பு
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை எனக் கூறிய அவர், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை எனக் குறிப்பிட்டுள்ளார்.