நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ஆர்.ராஜேந்தர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற தனியிசைப் பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இதில் அவரது பேரன் ஜேசனை பாடகராகவும், நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பாடல் வெளியீட்டு விழா குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு டி.ராஜேந்தர் பேசுகையில், ‘வந்தே வந்தே மாதரம்’ பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளேன். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தை இந்தியில் எடுத்து பான் இந்தியா அளவில் முயற்சி செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதிஇல்லை. இப்போதும் பான் இந்தியா அளவில் படமெடுத்து என் பேரன் ஜேசனை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால், இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்போது இறைவன் அருளால் மீண்டும் வந்துள்ளேன். எனவே, மீண்டும் அந்த பான் இந்தியா படத்தைத் தொடங்க உள்ளேன்” என்றார்.