லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற “தி லெஜன்ட்” திரைப்படம் விரைவில் OTT-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நடிப்பில் ஆர்வம்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் சரவணன், தனது கடைக்கான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக விளம்பரங்களில் தோன்றிய சரவணன், தற்போது ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்திருகிறார். தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக தயாரித்த “தி லெஜன்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. ஜே.டி – ஜெரி இயக்கியிருந்த இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
OTT ரிலீஸ்?
லெஜண்ட் சரவணன் தற்போது 2-வது படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ள சரவணன், அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சரவணன், தி லெஜண்ட் படத்தின் OTT ரிலீஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் அனைவரும் காணும் வகையில் “தி லெஜெண்ட்” விரைவில்’ என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தி லெஜண்ட் படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.















































