தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு, மருந்து மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
சீனாவில் பரவ் வரும் புதிய வகை கொரோனா வைரஸ் அந்நாட்டில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனாவை தடுக்க மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிந்றன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இன்று அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
அவசர கால ஒத்திகை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்; கொரோனா தொற்று சிகிக்சை தொடர்பான மாதிரி பயிற்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த மாதிரி பயிற்சியில் தற்போது உள்ள அனைத்து கட்டமைப்புகளும் சரிபார்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி, தீவிர சிகிச்சை பிரிவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் வசதி
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்தவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக நடைமுறைகளை உறுதிப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது. பொறுப்பு அதிகாரிகள் 12 மணி நேரம் தங்களுக்கு கீழ் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், படுக்கை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.