வால்பாறை அருகே புதரில் மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியதில் கள மேற்பார்வையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மக்கள் பீதி
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிபாறை நல்லகாத்து பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கரடி ஒன்று நான்கு பேரை தாக்கியது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒருவரை கரடி தாக்கியுள்ளது, அவர்களை பீதியடைச் செய்துள்ளது.
மீண்டும் தாக்குதல்
வால்பாறை புதுதோட்டம் பகுதியில் முத்துகுமார் என்பவர் கள மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று 12 ஆம் எண் காட்டுப் பகுதியில் அவர் பணி மேற்பார்வையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியது. இதில் முத்துக்குமாரின் இடது கை மற்றும் மணிக்கட்டு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனை கண்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டு அந்த கரடியை விரட்டி, முத்துகுமாரை காப்பாற்றினர். பின்னர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை தாக்கி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.