திருவண்ணாமலை மலை உச்சயில் இன்று (டிச.,06) மாலை மகா தீபம் ஏற்றப்பட்ட போது அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர லட்சக்கணக்கான மக்கள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழா
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாந மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அருகே உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுவதை, லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா கோஷம் விண்ணதிர தரிசித்தனர். ஆண்டுக்கு ஒருமுறையே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அண்ணாமலையார் காட்சியளித்ததும் பக்தி பரவசத்துடன் மக்கள் வழிபட்டனர். மகா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 4,500 லிட்டர் நெய் மற்றும் சுமார் 1,100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டது. மகா தீபம் ஏற்றப்படும் வைபவத்தைக் காண தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.