மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் ஊழியர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை எச்சரித்துள்ளது.
சிறப்பு முகாம்
தமிழக மின் வாரியத்தில் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், நுகர்வோரின் வசதிக்காக 2,811 சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் டிச.,31-ம் வரை நடத்தப்படுகிறது.
குற்றச்சாட்டு
இந்த நிலையில் ஆதாரை இணைக்க மின்வாரிய ஊழியர்களில் சிலர் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் சிவலிங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆதார் இணைப்பு பணிகளுக்காக வரும் பொதுமக்களுக்கு போதிய இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை கொடுக்க வேண்டும். தேவைப்பாட்டால் பொதுமக்களுக்கு பந்தல் வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல், இணைப்பு பணி நடைபெறும்போது கணினியில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டால் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க மாற்று கணினிகள் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் ஆதார் இணைப்புக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணமும் வாங்கவில்லை என்பதை மண்டல அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில், பணம் வாங்கியது தொடர்பாக புகார்கள் ஏதும் வந்தால் உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு
செயற்பொறியாளர்கள், பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் ஆதார் இணைப்பு பணிகளை தினமும் கண்காணிக்க வேண்டும். தொழில்நுட்பக்கோளாறு ஏதும் ஏற்பட்டால் தொழில்நுட்ப பிரிவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்க்கப்பட வேண்டும். ஆதார் இணைப்பு கவுண்டர்களில் பெயர் மாற்றமும் செய்யலாம். டிச.31ம் தேதி வரை பண்டிகை நாட்களும் உணவு மற்றும் தேநீர் இடைவேளி இன்றி காலை 10.30மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் இணைப்பு கவுண்டர்கள் இயங்கும். மேலும், பிரிவு அலுவலகங்களில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே வைத்திருக்க வெண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.