புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களை சோகமடையைச் செய்துள்ளது.
அன்பாக பழகும் குணம்
1995-ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யானை, புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த யானை, அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கியும் வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.
திடீர் மரணம்
பாசத்துடன் பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட லட்சுமி யானை, வழக்கம்போல் இன்று காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும் பல முயற்சிகள் எடுத்தும் பலன் அளிக்காமல் யானை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது.
கண்ணீருடன் அஞ்சலி
தற்போது மணக்குள விநாயகர் கோவில் எதிரே லட்சுமி யானை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சுமியின் உடலுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்த யானைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். யானையை கண்டு பக்தர்கள் பலர் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. யானை லட்சுமி உயிரிழந்தது காரணமாக மணக்குள விநாயகர் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் லட்சுமி அடக்கம் செய்யப்பட உள்ளது.
பேரிழப்பு
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார். லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தி என்றும் லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது எனவும் கூறினார். லட்சுமியை அடக்கம் செய்ய அரசு துறை நிற்கும் எனத் தெரிவித்த தமிழிசை, இதய அடைப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தாக கூறினார்.