ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்கு எதிரானது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
துரதிர்ஷ்டவசம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிர்ஷ்டவசமானது என்றார். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நல திட்டங்களுக்கு காலம் தாழத்தாமல் ஆளுநர் உடனடியாக கையெழுத்திடுவது தான் மரபு என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் விமர்சனங்கள் இல்லாமல் ஆளுநர் பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். 
ஆணவத்தின் வெளிப்பாடு
அரசியலில் இருப்பவர்களின் தலையெழுத்து மக்கள் கையில் உள்ளது எனக் கூறிய டிடிவி தினகரன், ஆணவத்தின் வெளிபாடாக அதிமுகவினர் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். அவர்களுக்கு மக்கள் நல்ல முடிவை தருவார்கள் என்றும் அவர் கூறினார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பிற்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட டிடிவி தினகரன், டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பது போதுமானதாக இல்லை என்றார்.















































