தஞ்சாவூர் அருகே இரு தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து ஒரு பேருந்தை கொண்டு மற்றொரு பேருந்து மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மோதல்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூரைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் பேருந்துகளில் யார் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, யார் அதிக வேகத்தில் முண்டியடித்துச் செல்வது என அந்தப் பேருந்தின் ஊழியர்கள் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இதனால் பேருந்து ஊழியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நேரப் பிரச்சனை
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அப்போது அந்த இரண்டு தனியார் பேருந்துகளின் ஊழியர்களிடையே நேரப் பிரச்சனைக் காரணமாக திடீரென தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு, சாலையில் இறங்கிய ஊழியர்கள் பொதுமக்கள் மத்தியிலும், பயணிகள் மத்தியிலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ச்சி
அப்போது ஆத்திரம் அடங்காத ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது பேருந்தை ரிவர்ஸ் எடுத்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேருந்துகளிலிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.