பெற்றோரை இழந்த பெண்ணை தத்தெடுத்த ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா அவரது மருத்துவ கனவை நிஜமாக்கியுள்ளார்.
தத்தெடுத்த ரோஜா
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் செய்ய வசதி இல்லாமல் தாய், தந்தையரை இழந்து தன்னந்தனியாக நின்ற பெண் புஷ்பா. அவரை நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வும், ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சருமான ரோஜா தத்தெடுத்தார். அந்த சிறுமிக்கான வாழ்நாள் முழுவதுற்குமான படிப்பு செலவை தான் ஏற்பதாக அறிவித்தார்.
நீட் தேர்வில் சாதனை
அதன்படி அவருக்குண்டான கல்விச் செலவுகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று படிக்க வைத்தார். அந்த சிறுமி தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்று முதலாமாண்டு MBBS பட்டப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளார். தத்தெடுத்த பெண்ணாக இருந்தாலும், அவர் என்ன படிக்க விரும்புகிறாரோ அதற்காக அவரை ஊக்குவித்து, அவரது மருத்துவ கனவை நிஜமாகிய ரோஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இலவச மருத்துவம்
மருத்துவ வசதி இல்லாமல் தனது தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அப்படி நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் தன்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் தன்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக செய்வதே லட்சியம் என மாணவி புஷ்பா தெரிவித்திருக்கிறார்.