தமிழக அரசின் பெண்களுக்கான கட்டணமில்லா இலவச பேருந்தில் வெண்டக்காய் மூட்டைக்கு கூடுதல் கட்டணம் கேட்டு தரக்குறைவாக பேசிய டிக்கெட் பரிசோதகர் மீது மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இலவச பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருத்து உசிலம்பட்டி செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த பேருந்தில் விராலிமாயன்பட்டியை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி, தான் விற்பனை செய்வதற்காக வெண்டைக்காய் மூட்டையுடன் ஏறி உள்ளார். பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பதால், வெண்டைக்காய் மூட்டைக்கு மட்டும் லக்கேஜ் கட்டணமாக ரூ.15 செலுத்தி சீட்டை பெற்றுள்ளார்.
லக்கேஜ் பிரச்சனை
விருவீடு என்ற பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது டிக்கெட் பரிசோதகர் சுப்பிரமணியன் பேருந்தில் ஏறி பரிசோதனை செய்துள்ளார். அப்போது மூதாட்டி லட்சுமியிடம், “50 கிலோ எடையுள்ள வெண்டைக்காய் மூட்டைக்கு ஒரு லக்கேஜ் மட்டும்தான் எடுத்துள்ளீர். எனவே இதற்கு இரண்டு லக்கேஜ் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் பேருந்தில் ஓசி பயணம் செய்யும் நீங்கள் ஏன் முறையாக லக்கேஜ் எடுக்கவில்லை எனக்கூறி மூதாட்டியை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
போலீஸில் புகார்
டிக்கெட் பரிசோதகரின் இந்தப் பேச்சால் மனவேதனை அடைந்த மூதாட்டி லட்சுமி, பேருந்து உசிலம்பட்டி பகுதிக்கு சென்றவுடன் காவல் நிலையம் முன்பு பேருத்தை நிறுத்தி, தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் சென்று டிக்கெட் பரிசோதகர் சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்கக்கோரி மீது புகார் அளித்தார். மேலும் தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையை காவல் நிலையத்திலேயே வைத்து எடை போட்டு, அதில் 24 கிலோ வெண்டைக்காய் மட்டுமே இருந்தது என்பதையும் அந்த மூதாட்டி ஆதாரத்துடன் நிரூபித்தார். கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் போக்குவரத்து ஊழியர்கள் கன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பலமுறை கூறியும், ஒருசில போக்குவரத்து ஊழியர்கள் இதுபோல் நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.