விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’யும் ஒன்று. ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய புகழ், அஜித்துடன் வலிமை, சந்தானத்துடன் சபாபதி, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் புகழ் தனது காதலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அப்போது தானும் பென்சியும் 5 வருடமாக காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம் எனவும் கூறினார். இந்நிலையில், புகழ் – பென்சியின் திருமண தேதி தற்போது வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.