இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவப்படுத்தும் விதமாக கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இசை ஜாம்பவான்
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான், இதுவரை 140-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய மொழிகளை தாண்டி பல மொழி படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழில் ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’, உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 6 தேசிய விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் ஏ.ஆர். ரஹ்மான் பெருமை சேர்த்துள்ளார்.
கௌரவம்
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடா நாட்டின் மர்காம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு ‘ஏ.ஆர் ரஹ்மான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
நன்றி
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது; “இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கடவுளின் குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.