பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
காந்த கண்ணழகி
சில்க் ஸ்மிதா என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கிறங்கடிக்கும் கண்கள் தான். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் இருந்த அவருக்கு, சிறுவதிலேயே திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அழகு குறிப்புகள் மீதும், அழகான தோற்றத்தின் மீதும், தனி ஈர்ப்பு கொண்ட சில்க், எப்பொழுதும் தன்னை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முக அலங்காரங்களை செய்து கொள்வாராம். அதனாலேயே சினிமா துறையில் இவர் நுழையும்போது மேக்கப் போடும் பணி பெண்ணாகவே காலடி எடுத்து வைத்துள்ளார். இவரது அழகை பார்த்த சில இயக்குநர்கள் தங்களது படங்களில் சிறிய சிறிய தோற்றங்களில் நடிக்க வைத்துள்ளனர். பின்னர் 1980-ல் வெளிவந்த வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததன் மூலம்தான் அவருக்கு ‘சில்க்’ என்ற பெயர் கிடைத்துள்ளது. கவர்ச்சியில் மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கி இருக்கிறார் சில்க்ஸ்மிதா. கவுண்டமணி, பாக்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980 முதல் 1990 வரை அவரது நடிப்புக்கு அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 450-க்கும் திரைப்படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் அவர் கொடிகட்டி பறந்து உள்ளார். 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சில்க் ஸ்மிதா மரணமடைந்தார். 
மிகப்பெரிய ஹிட்
2011 ஆம் ஆண்டில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வித்யா பாலன், அதில் சில்க் ஸ்மிதாகவே வாழ்ந்தார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஹிந்தி, தமிழ் ,தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இப்படம் திரையிடப்பட்டது. 
மறுப்பு, விருப்பம்
இந்த நிலையில், ‘டர்ட்டி பிக்சர்’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்யும் பொறுப்பை பிரபல கதாசிரியர் கனிகா தில்லானிடம் அவர் ஒப்படைத்துள்ளார். ‘டர்ட்டி பிக்சர்’ 2-ம் பாகத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத்தை ஏக்தா கபூர் அனுகியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் டாப்சியும், கீர்த்தி சனானும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.















































