மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்ணகியாகி நான் எல்லா இடங்களுக்கும் வருவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய, மாநில அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கண்ணகியா வருவேன்
ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது; எங்களது ஆர்ப்பாட்டத்தில் கூடிய மக்கள், நூறுக்கும் பீருக்கும் சோறுக்கும் கூடிய கூட்டம் அல்ல. இது தானாக சேர்ந்த கூட்டம். மத்திய, மாநில அரசுகளிடம் நிதி இல்லை என்றால் ஏற்கனவே ஆண்ட கட்சி, ஆளும் கட்சி அமைச்சர்களின் ஊழல் பணத்தை வசூலித்தாலே போதும். மக்களிடம் வரி வசூலிக்க வேண்டாம். மின் கட்டணம், சொத்து வரி என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறது. எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அதுபோல மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா இடங்களிலும் வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.