18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் மாநிலங்களை தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னணி நடிகை
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நக்மா நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த நக்மா, நடிகை ஜோதிகாவின் அக்கா ஆவார்.
தீவிர அரசியல்
சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்திலேயே நக்மா அரசியலில் குதித்தார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், அதன்பின் நடைபெற்ற தேர்தல்களில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதனால் அவருக்கு மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி கொடுத்து காங்கிரஸ் கட்சி அழகு பார்த்தது. நீண்ட நாட்கள் கட்சியில் இருப்பதால் தனக்கு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நக்மாவுக்கு, அதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வந்தது.
ஏமாற்றம்
இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் வழங்கும் என நக்மா எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று வெளியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் நடிகை நக்மாவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த நக்மா, கட்சி மேலிடம் தன்னை கை விட்டு விட்டதே என வேதனை தெரிவித்துள்ளார்.
தகுதி இல்லையா?
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நக்மா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூற்யிருப்பதாவது; 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது எனக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்கப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்தார். அதன்பேரில் நான் அக்கட்சியில் இணைந்தேன். ஆனால் உறுதி அளித்தபடி இன்னும் எனக்கு எம்.பி பதவி கொடுக்கவில்லை. 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தற்போது இம்ரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரைவிட எனக்கு எந்த விதத்தில் தகுதி குறைச்சல் உள்ளது. 18 ஆண்டு காலம் தவம் இம்ரான் முன் பொய்த்து விட்டது. இவ்வாறு நக்மா குறிப்பிட்டு உள்ளார்.