தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அசத்தல் நடிப்பு
அஜித் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இவர், நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இசை எனும் படத்திற்கு தானே இசை அமைத்து, அதனை இயக்கியும் உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
வரி கட்டல
எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015 ஆம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக்கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், வருமான வரித்துறை தரப்பில் முறையான சோதனை நடத்தி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.