ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் என்றும் உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
தொடரும் போர்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை தொடங்கியது. மூன்று மாதங்கள் ஆகியும் இந்த போர் நீட்டித்து வருகிறது. உக்ரைன் போரை அதிகபட்சமாக மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதாகவும், அதை நிறைவேற்ற முடியாததால் ரஷ்ய படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் மீது அவர் கோபம் கொண்டதாகவும் தகவல் வெளியானது.
சதியில் சிக்காத புதின்
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிவிட்டார் எனவும் உக்ரைன் ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார். உக்ரைனிலிருந்து வெளிவரும் ‘உக்ரைன்ஸ்கா ப்ரவ்டா’ எனும் இதழுக்குப் பேட்டி அளித்திருக்கும் உக்ரைன் பாதுகாப்புத் துறை உளவு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாவது; ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்தது. பிப்., 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புதின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.