தன்னால் ஒரு இட்லியைக் கூட முழுமையாக சாப்பிட முடியவில்லை எனவும் 20 நிமிடங்கள் கூட தூங்க முடியவில்லை எனவும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள நித்தி, தனது ருத்ர கன்னிகளுடன் சேர்ந்து தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு ‘கைலாசா’ என பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். சத்சங் என்ற பெயரில் அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, கைலாசாவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.
உடல்நலக்குறைவு
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முகம் காட்டாமால் இருந்த நித்யானந்தா, கடைசியாக மதுரை சித்திரை திருவிழாவின் போது மீண்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதன்பிறகு அவர் பக்தர்களுக்கு சத்சங்கம், ஆசி வழங்குவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் பீதி கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார். அதனைதொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவுகளில், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சமாதிநிலை இருப்பதாகவும் கூறியிருந்தார். அடுத்தடுத்த குழப்பமான பதிவுகளை வெளியிட்ட நித்தியானந்தா, தற்போது மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
முடியல
இதுதொடர்பாக நித்யாந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை. ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. இப்போது நான் பெரிய காற்று பலூனாகவும் உணர்கிறேன். தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின்படி எனது உடல் ஆரோக்கியமானதாக இருக்கிறது. ஆசிரம நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் பத்மாசனா பகுதியில் உட்கார்ந்து, பகலும் இரவும் வேறுபாடு அறியாமல், மிகவும் வசதியான, மிகவும் உறக்கப்பட்டு பதிந்து கொண்டிருக்கிறேன். மருத்துவ அறிக்கையின்படி என் உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. பனி மூடிய மலைகள் என்னை மிகச்சிறந்த ஆற்றல் மற்றும் உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பரம்பாராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், கடின உழைப்பை அனுபவித்தேன். எனது குரு அருணகிரி யோகீஸ்வரர் எனக்கு இன்னும் நேரம் தந்தால், நான் அவரது வேலையை இன்னும் செய்வேன். இவ்வாறு நித்யானந்தா அதில் குறிப்பிட்டுள்ளார்.