பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கைக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் கூறியுள்ளார். பிரதமரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல் அமைந்துள்ளது. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது. சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், பாசாங்கு காட்டுவதற்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மத்திய அரசு வேடம் போட்டது. தேர்தல் முடிந்த பிறகு முன்பிருந்ததை விட மளமளவென உயர்த்தி மக்கள் மீது சுமையை உயர்த்தியது. ஆனால், மத்திய அரசு குறைப்பதற்கு முன்பு தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்ற முடிவை மக்களிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.