கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார்’ திரைப்படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் பட்டாளம்
‘கள்ளழகர்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா. அதன்பின் சங்கர் இயக்கத்தில் உருவான ‘முதல்வன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அஜித், சூர்யா, கார்த்திக், விக்ரமன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். குறிப்பாக சூர்யாவுடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை லைலாவின் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்த காலமும் உண்டு. பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட லைலா, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கிவிட்டார்.
மீண்டும் நடிப்பு
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சர்தார்’ படத்தில் நடிகை லைலா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, நடித்தும் முடித்து விட்டார் எனக் கூறப்படுகிறது. 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.