சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 18-ந் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகையில், உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி என்பது தெரியவந்தது. முதியவர் மீது மோதிய கார் நடிகர் சிம்புவின் கார் என்றும் சம்பவம் நடந்த அன்று அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த காரை ஓட்டிச் சென்ற செல்வம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.