கடந்த 4 மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்து ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டுதான் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், எவ்வளவு உயரும் என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 24-ந் தேதி உக்ரைன் – ரஷியா இடையே போர் தொடங்கிய போது, தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது. அதன்பின் 2 நாட்கள் விலை குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்த நிலையில், இன்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்வை சந்தித்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,055க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,440க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.