அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த வந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை திடீரென சந்தித்து பேசினார்.
விசாரணை
அரியலுார் மாணவி மரணம் குறித்து நேரில் விசாரிக்க, பா.ஜ.க., விஜயசாந்தி உட்பட நால்வர் குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு, சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. அதன்பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயசாந்தி கூறுகையில்; மாணவி உயிரிழக்கும் முன், கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அவரின் பெற்றோரிடம் கேட்கப்பட்ட போதும், இதே தகவலை தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்திடம் விசாரிக்க அனுமதி தரவில்லை.
மவுனம் காப்பது ஏன்
மாணவியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவர் மவுனமாக இருப்பது ஏன் என தெரியவில்லை. எங்களது விசாரணை அறிக்கை, தேசிய தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.
திடீர் சந்திப்பு
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அவரது வீட்டில் நடிகை விஜயசாந்தி திடீரென சந்தித்து பேசினார். நட்பின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயசாந்தி – சசிகலாவின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.