மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கைது
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான அவர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், அவரை கைது செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ராஜேந்திர பாலாஜி மீது நேரடியாக எந்த இடத்திலும் குற்றச்சாட்டு இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும் அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க நீதிபதிகள் நிபந்தனை விதித்ததையடுத்து, ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வெளியே வந்தார்
உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து ராஜேந்திர பாலாஜி இன்று வெளியே வந்தார். காலை 10 மணிக்கு மேல் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், காலை 7 மணிக்கே அவர் வெளியே வந்தார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் இருந்து கார் மூலமாக விருதுநகருக்கு புறப்பட்ட ராஜேந்திர பாலாஜி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, அதன்பின் விருதுநகர் புறப்பட்டுச் சென்றார்.