தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில், வங்கி அதிகாரி ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளார். அதனை தடுப்பதற்கும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
விரைவில் முற்றுப்புள்ளி
அதிமுக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில்; ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில் சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது. ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக்கோரி இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. வழக்கைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.