ஆட்சியை பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
எம்.ஜி.ஆரின் வழியில் அதிமுக
அப்போது பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அடிப்படை உறுப்பினர்களால்தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜிஆரின் கனவை தற்போதைய தலைமை நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்தார். நெற்றியில் உதயசூரியன் சின்னத்தையும், கையில் திமுக கொடியுடன் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் நடித்து திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். என்றும் எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்தான் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டதாகவும் கூறினார்.
குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அமைந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் ஆட்சி செய்ததாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததாக கூறினார். அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆட்சியை பிடிப்பதற்காக 525 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசான திமுகவை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள் எனக் குறிப்பிட்ட ஓ.பி.எஸ்., மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என ஊறுதிபட தெரிவித்தார்.