குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல் கோவை கொண்டு செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரர்கள் மரணம்
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் குன்னூர் அடுத்த காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து முப்படைகளும் விசாரணை நடத்தி வருகிறது.
விபத்து
வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட வீரர்களின் உடல் சூலூர் விமானப்படை தளத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பாதுகாப்புக்காக போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர். நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் காவலர் வாகனம் வளைவில் திரும்பும்போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வீரரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மற்றொரு இடத்தில் விபத்தில் சிக்கியது. உடனடியாக விபத்து ஏற்பட்ட ஆம்புலன்ஸில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு உடல் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.