தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.150-ஐ தொட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில், இன்று அதிரடி ஆஃபர் அறிவித்து பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்றும் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்ற சலுகையை அறிவித்து விற்பனை செய்யப்பட்டது. இந்த அதிரடி ஆஃபரை அறிந்து பிரியாணி கடையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.