ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவையில் அமளி
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளி) காலை அவை தொடங்கியதும், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களை முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டனர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது. பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்பதி ராம்பாபு, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்தும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்தும், அம்பதி ராம்பாபு மன்னிப்பு கோர வலியுறுத்தியும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவர் முன்வந்து கூச்சலிட்டனர். இதற்கு ஆளும் கட்சித் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
சபதம்
அவையில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘தான் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தனது மனைவி தன்னை அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதைத் தவிர அவர் எந்தக் காலத்திலும் அரசியலுக்குள் வந்ததில்லை என்றும் தன்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்று வருத்தப்பட்டது இல்லை எனவும் வேதனையுடன் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் பலமுறை விவாதங்களில் பேசியிருக்கிறேன். இதுபோன்று எதிர்க்கட்சிகள் தரக்குறைவாக நடந்ததை தான் இதுவரை பார்த்தது இல்லை எனவும் அவர் கூறினார். மேலும், ஆளுங்கட்சியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை அவமானப்படுத்தியதாகவும், சுயமரியாதையை அடமானம் வைத்து தான் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என்றும் மக்களிடம் சென்று போராடி, அவர்களின் ஆதரவைப் பெற்று, மக்களின் தீர்ப்பால் மீண்டும் முதல்வர் ஆன பிறகு அவைக்குள் வருகிறேன். அதுவரை இந்த அவைக்குள் வரமாட்டேன் என ஆவேசத்துடன் சபதமிட்டு வெளியேறினார்.
கண்ணீர்விட்டு அழுகை
இதனையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சில வினாடிகள் கண்ணீர் விட்டு அழுத அவர், முகத்தைத் தனது கைக்குட்டையால் மூடிக்கொண்டு பேச முடியாமல் தவித்தார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்ணீர்விட்டு அழுத புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.