தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுபான பார்கள் சில தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் செய்திருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டன.
விற்பனையில் சாதனை
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 3-ம் தேதி ரூ.205.61 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான 4-ம் தேதி ரூ.225.42 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.51.68 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.47.57 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.79.84 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.74.46 கோடிக்கும் மதுபானம் விற்பனையானது. கடந்த தீபாவளிக்கு ரூ 467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ 431.03 கோடிக்கு மதுவிற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.