சேலம் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை காப்பாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திடீர் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டிருந்த போது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறினர். அவர்களை அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி மீட்டனர். தாயையும், சேயையும் காப்பாற்றிய 2 இளைஞர்கள் ஆற்றில் தவறி விழுந்தனர். பின்னர் அவர்கள் நீச்சலடித்து கரை ஏறினர். பதபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் பாராட்டு
இந்த நிலையில், தாய், சேயை காப்பாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொர்பாக டுவிட்டரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.