மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னலில் இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அப்பெண் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலையில் நடனம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ராசோமா சதுக்கம் அதிக போக்குவரத்து உள்ள சாலையாகும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், சில தினங்களுக்கு முன்பு சிக்னல் போட்ட உடன் இளம்பெண் ஒருவர் திடீரென்று தோன்றி நடமாடினார். விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில் நடனமாடிய அந்தப் பெண், முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இவரின் நடன வீடியோ சமூக வலை தளங்களில் தீயாக பரவியது.
போலீஸ் நடவடிக்கை
இதுதொடர்பாக இந்தூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ஸ்ரேயா கல்ரா என்றும் அவர் ஒரு மாடல் அழகி என்பதும் தெரியவந்தது. ஸ்ரேயா கல்ராவுக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை வழங்கிய போலீசார், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே, தன் மீது எழுந்துள்ள குற்றத்தை முழுவதுமாக ஸ்ரேயா மறுத்துள்ளார். பொதுமக்களிடையே முககவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இதனை செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.