பொதுமக்களை ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்கக் கூடாது என கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலீஸ் கெடுபிடி
கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக கேரள போலீசார் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சூரைச் சேர்ந்த அனில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தான் திருச்சூரில் கடை நடத்தி வருவதாகவும், தன்னையும், தனது மகளையும் கடையை பூட்ட சொல்லி போலீசார் ஆபாசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் இந்த செயலால் பொதுமக்கள் மத்தியில் தனக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி அறிவுரை
இந்த மனு நீதிபதி தேவன்ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சமீப காலமாக கேரள போலீசார் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாக கூறினார். பொதுமக்களிடம் போலீசார் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார். பொது இடங்களில் யாரையும் ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்கக் கூடாது என்றும் இதுதொடர்பாக டிஜிபி அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.