போதைப் பொருள் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.
போதைப் பொருள் புகார்
தெலுங்கு திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு தெலங்கானா போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் உள்ளிட்ட 62 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதியில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடிகையிடம் விசாரணை
போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரை அமலாக்கப் பிரிவினர் கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரது பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மியிடமும் விசாரிக்கப்பட்டது. சார்மியிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கிடுக்குபிடி விசாரணை
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங், ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து பாகுபலி நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.