ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலையை நினைத்தால் கவலையும், பயமும் ஏற்படுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகம் கவலை
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள தூதரக அதிகாரிகளை ஒவ்வொரு நாடுகளும் திரும்ப அழைத்து வருகின்றன. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி, தன்நாட்டு மக்களை பத்திரமாக அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், அங்குள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா? அவர்களின் உரிமைகள் காக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலிபான்களின் சட்டதிட்டம் பெண்களை அடிமையாகவே பார்க்கும் என சர்வதேச சமூகம் கவலை தெரிவித்து வருகிறது.
கதறி அழனும்
இந்த நிலையில், ஆப்கான் பெண்களின் நிலை மிகுந்த கவலை அளிப்பதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? இதுபற்றி ஐ.நா. ஏதாவது செய்ய முடியுமா? எதுவும் தெரியவில்லை. ஆனால் கவலை, பயம், மன அழுத்தமாக இருக்கிறது. கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.