பெண் என்ஜினீயர் ஒருவர் அளித்த மனுவைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து போனார்.
பெண் என்ஜினீயர் மனு
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, மேட்டூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் இரா.சவுமியா என்பவர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது குடும்ப சூழ்நிலையை விளக்கியதுடன், தனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள இரா.சவுமியா, தனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
நெஞ்சம் நெகிழ்ந்த முதலமைச்சர்
இரா.சவுமியாவின் மனுவைக் கண்டு மனம் நெகிழ்ந்து போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின் விவரம் வருமாறு; “மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சவுமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு முதலமைச்சர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.