கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை
இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும் நல்ல மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது. கேரளாவின் தெற்கு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.
கனமழை பெய்யும்
இந்த நிலையில், தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரத்திலும், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டியும், கர்நாடக முதல் தென் தமிழகம் வரையும் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள வானிலை அய்வு மையம், கேரள மற்றும் கர்நாடக பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது.