கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 7-ம் தேதி வரை மேலும் ஒருவார காலம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு முதலமைச்சர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.