முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா எனும் சங்கிலியை உடைப்போம் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் சுற்றியதால் தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பீதி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முழு ஊரடங்கு நமது நன்மைக்காகத்தான் அரசு போட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். மருத்துவ தேவைகள் இன்றி வேறு தேவைக்காக மக்கள் வெளியே வர வேண்டாம். அரசின் உத்தரவுகளை மறக்காமல் பின்பற்றுங்கள். கொரோனாவை யாருக்கும் தர மாட்டோம், யாரிடமும் பெற மாட்டோம் என மக்கள் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.