தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி திட்டம்
சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்ற அவர், இரும்பு ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் சென்ற முதலமைச்சர், நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.