தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பதை முழுமுதற் கடமையாக கருதி செயலாற்ற வேண்டுமென புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக ஆட்சி
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகவும், 33 அமைச்சர்களும் கடந்த 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பின்னர் அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர்.
கமல் வேண்டுகோள்
இதனிடையே, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.