மறைந்த பிரபல நடிகர் விவேக்கின் நினைவாக காவலர்களுடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார். 
ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரக்கன்றுகள் நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பிய விவேக்கின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு உள்பட மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். 
மரக்கன்று நட்டு அஞ்சலி
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார். விவேக்கிற்கு 59 வயதானதை குறிக்கும் வகையில், நடிகை ரம்யா பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் காவலர்கள் இணைந்து 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.















































